Tuesday, June 26, 2007

சுரம் தப்பிய முரசொலி

உமது முரசொலியால்
எமது மக்களின் காது கிழிகிறது..

உமது தலைவனின் கரங்கள்
பாஜகாவுக்கு பல்லக்குத் தூக்கிச் சிவந்ததா
மாஞ்சோலை தொழிலாளியின் ரத்தத்தால் சிவந்ததா?
பட்டிமன்றம் வைப்போம் பாப்பையாவைக் கூப்பிடுங்கள்.
பெரியார் கனவில் சொன்னாரோ
மோடியோடு கூடிப்புணர?

பெரியார் உங்கள் முகவரியல்ல
உமது தலைவன் உங்கள் நெற்றியில் போட்ட மூவரி!

நீர் சொன்னது சரிதான்
கொள்கைக்காகவல்ல பதவிக்காகவே கொலைகள் -
கண்ணகி நேசரல்லவா?
அது தான் மதுரை எரிகிறது போலும்

"தவறான கட்சியின் நல்ல மனிதர்!"
சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த வாஜ்பாய்க்கு
பெரியாரைக் காட்டிக் கொடுத்தவரின் சான்றிதழ்!
வெகுபொருத்தமிப் பொருத்தம்

அட,
இன்னுமெதற்கந்த முகமூடி?
அழுகி நாறும் உங்கள் முகத்தைக் கொஞ்சம் காட்டுங்களேன்..

Monday, June 25, 2007

வேண்டும் அசுர குணம்!

அசுர குணம் கண்டு நடுங்கும்
'தேவ' குணத்தோரே
தேவாசுர யுத்தத்தின் போக்கில் கருங்காலிகளின்
வாள் எங்கே திரும்பும் என்று தெரியுமெமக்கு

திருவரங்கத்தில் ஈரோட்டுக் கிழவனின்
மானம் காக்க தெருவிலிறங்காத
உமது குணம்..
எமது மக்களின் வாழ்வை கூவிக் கூவி
அமெரிக்க வெள்ளைப் பார்ப்பனனுக்கு விற்கும்
உமது குணம்..
எமது தேசத்தின் வளங்களனைத்தையும்
அந்நியனுக்கு அடகு வைக்கும்
உமது குணம்...
'தேவ'குணம் தானென்று
நாம் உணர்ந்தேயுள்ளோம்

அங்கே உடைந்தது சிலையின்
தலை மட்டுமல்ல
உமது மஞ்சள் பிம்பமும் சேர்ந்தே தான்...
கல்லக்குடி நினைவுகள்
கனவாய் கரைந்தோடி யுகங்கள் போயின
இன்னுமெதற்கு அந்த மஞ்சள் திரை?
கிழித்து எரியுங்களதை
நீங்கள் அம்மணமாய் நிற்பதை உலகு பார்க்கட்டும்

எமது சூத்திரப் பட்டம் போக்க
மூத்திரப் பையை கையில் சுமந்து
தெருவில் அலைந்த பெரியார் எங்கே.,
தேசத்தை விபச்சாரத்துக்கு அமெரிக்கனுக்கு
தாரை வார்க்கும் நீ எங்கே?

ஆம்! எமக்கு அசுர குணம் தான்!
தேவகுணம் கொண்ட சொறி நாய்களே
வாரும் மோதிப் பார்த்து விடுவோம்

Sunday, June 24, 2007

அமெரிக்க கோதுமை - மீண்டும் பார்த்தீனியம்?

" நான் உன்னை செருப்பால் தான் அடிப்பேன். பதிலுக்கு நீ என் காலில் விழுந்து கும்பிட வேணும் " - இந்தப் பேச்சு ஒன்றும் நமக்குப் புதிதில்லை..நம் பாட்டன்மார்கள் மூஞ்சியில் அறைந்த - இன்னும் அங்காங்கே எதிரொலித்துக் கொண்டிருக்கும் - அதே வரிகள் தான்.. " நான் கோதுமையை உனக்கு ஏற்றுமதி செய்தால் விஷ விதைகளோடு தான்ஏற்றுமதி செய்வேன். பதிலுக்கு நீ எனக்கு ஏற்றுமதி செய்யும் தானியங்கள் முதல் தரத்துடன் இருக்க வேண்டும்" இது அமெரிக்கா இந்தியாவைப் பார்த்துசொல்லிக் கொண்டிருக்கும் வரிகள். இவ்விரண்டின் சாராம்சமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதல்ல!

சமீபத்தில் இது விஷயமாக நடந்த ஒரு பேச்சுவார்த்தை முறிவுக்குப் பின் ( பரவலான எதிர்ப்புக்குப் பின் தோல்வியடைந்துள்ளது) இந்தியாவின் ஏற்றுமதி தானியங்கள் உலகதரத்துடன் இல்லை என்பதைசுட்டிக் காட்டி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. மறுபுறம்இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா எத்தனிக்கும் தானியங்களிலோ 21 வகையான களைகள் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில்ப்ரோமஸ் ரிஜிடஸ் ( Bromus rigidus ), ப்ரோமஸ் ஸ்கேலினஸ் ( Bromus scealinus) போன்ற ஆபத்து நிறைந்து நச்சு விதைகளும் கலந்துள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன் அமெரிக்கா இந்தியாவுக்குக் கொடுத்த அன்புப் பரிசு தான் பார்த்தீனியச் செடிகள் என்பது பலருக்கு மறந்திருக்காது. தனது கோதுமை தானியத்தில் நச்சு விதைகள் கலந்திருப்பதை மறுக்கவியலாத அமெரிக்கா, அவைகளை களைவது இயலாதவொன்றென்றும் சொல்லிவருகிறது. மேலும் தனது தானியங்கள் ஒப்பீட்டளவில் சிறந்த தரமுள்ளது என்றும், இதையே தாம் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருவதாகவும் சொல்லி இருக்கிறது.

ஜப்பான் இந்த கோதுமையைத் தனது பெரும் இயந்திரங்களுக்கான அரவை துகளாக ( தூசியாக) பயன்படுத்தவே இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலோஇது உணவுக்குப் பயன்படுத்தப் படுவதோடு, நாற்றாங்காலுக்கும் பயன்படுத்தப் படும் ஒன்று.

ஏற்கனவே அமெரிக்கா கொடுத்த அன்புப் பரிசை சமாளிக்க இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை விரயம் செய்தும் பலனில்லாமல் பல்லிளிக்கிறது.தற்போதைய எதிர் குரல்கள் அடங்கிப் போனபின் இந்திய அரசு வழக்கம் போல் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அமெரிக்க கோதுமை இறக்குமதிக்குஅனுமதியளிக்கும் வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு நிகழுமானால் இந்திய அரசு தனது மக்களுக்கு விலை கொடுத்து நோய் நொடிகளை வாங்கிக் கொடுப்பதாகத் தான் அர்த்தம்.

இவைகளைப் படிக்கையில் ஏதோ இந்தியாவில் தானிய விவசாயம் முற்றாக ஒழிந்து விட்டது போலவும் இறக்குமதி கோதுமையை நம்பித்தான் கோடானுகோடிமக்கள் பிழைத்துக் கிடப்பதாகவும் நினைத்தால் - அது தவறு!.. சில வருடங்களுக்கு முன்பு வரை கோதுமை உற்பத்தியில் இந்தியா ஒரு தன்னிரைவுபெற்ற நாடு. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியைக்கைவிட வேண்டிய நிர்பந்தம் உண்டாக்கப்பட்டதின் விளைவே இன்றைய இந்த நிலை.

அம்மாநில விவசாயிகள் இப்போது பரவலாக காண்ட்ராக்ட் பார்மிங் எனப்படும் ஒப்பந்த விவசாய முறையில் பெப்சிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும்உருளையும், பூவும், பழ வகைகளும் விளைவிக்குமாறு நிர்பந்திக்கப் பட்டுள்ளனர். தானியங்கள் கொள்முதலில் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டகுளருபடிகளாலும், வங்கிக் கடன்களை ஈடுகட்ட வேண்டிய நிலையிலும் ஒப்பந்த விவசாயம் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதிலும்பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்கைக்கு பலியான விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருவது தினசரிகளில் செய்தியாய் வந்தவன்னமுள்ளது.

மொத்தத்தில் ஒரு பக்கம் விவசாயிக்குத் திரும்பிய பக்கமெல்லாம் அடி! மறுபுறமோ அத்தியாவசிய தானியங்களையே இறக்குமதி செய்து தான் தேவையை ஈடுகட்டியாக வேண்டிய நிலை! இந்த சூழலை உலகமயமாக்கல் ஒப்பந்தத்தின் மூலமும் இன்னும் பல ஒப்பந்தங்களின் மூலமும் உருவாக்கி விட்டு இப்போது அதைத் திட்டமிட்டு நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நரித்தனம்.

இதைப் பேச எந்தவொரு பெரிய கட்சிக்கும் மனதில்லை. மக்களிடம் இதை எடுத்துச் செல்ல தயாரில்லை. மாட்டுக்கு யார் தாடி ( கவர்னர் ஆட்டு தாடின்னா, ஜனாதிபதி மாட்டு தாடி தானே? ) என்பதை பற்றித் தான் முக்கிய விவாதமாய் நடந்து வருகிறது.

Friday, June 22, 2007

கனவுகளில் இடறும் மீட்பன்!

நிறையாத வயிறுகளின்
திமிறிக் கிளம்பும் கோபம்..
மடைமாற்றக் கிளம்பி வந்தான்
பரட்டையன்...
வறண்ட வாழ்க்கையின் கனவுகளில் மட்டும் இடறும்
மேக்கப் போட்ட மீட்பன் -
மேக்கப் செல்வு 90 கோடி!

செறிக்காத சிக்கன் பிரியானியின்
அவஸ்தையோடு உள்ளே நெளியும்
கேள்விகளுக்கும்
வெறிக்கும் விழிகளைப் பார்த்து
வியர்க்கும் முகங்களுக்கும்
ஏசி அரங்கினுள் ஆறுதல் தந்தான் சிவாஜியாய்

காலி வயிற்றில் பொங்கும் அமிலத்தை
நீரூற்றித் தனிக்கும் சிவாஜி...
பாராட்டில் தெரியுது மாமியின், மு.கவின்
நிம்மதிப் பெருமூச்சு!

பனையின் நிழல் போல் தான்
இந்தப் பரதேசி தரும் ஆறுதலும்..
உச்சி வேளையில் மீண்டும்..
வெடித்துக் கிளம்பும் கோபம்!
அப்போது அதிரும் அவர்கள் அஸ்திவாரம்!

Thursday, June 7, 2007

சூடு பரவுகிறது!

பெய்யெனப் பெய்கிறது மழை
குரல்வளையை கடக்கும் தேனீரின் இளஞ்சூடு
உயிரின் ஆழம் வரை ஊடுருவிச் செல்கிறது..
என் சாளரத்தினூடாய்த் தெரியும் சாலையில்
சிதைந்ததோர் ஓவியமாய் விரிகிறது
எதிர்கால இந்தியா....

மழைக்காய் கூரைக்கு வெளியே ஒதுங்கிய
பொடியன்களின் காகிதக் கப்பல்கள்...
மூழ்கும் கப்பல்களோடு சேர்ந்து மூழ்கும்
வல்லரசுக் கனவுகள்!
நிலவுக்குப் பறக்கிற ராக்கெட்டை
கூரைப் பொத்தல்கள் வழியே ரசித்துப் பார்க்கும்
நாளைய இந்தியா...

சூடு பரவுகிறது.. இப்போது கண்களில்!

Monday, June 4, 2007

ஓர் இரவில் ஒரு கனவு!

நேற்றுத் தான் அது நடந்தது..
சட்டெனப் பார்த்தால்..
கைகளிரண்டு மட்டும் பெருத்து நீண்டு கொண்டே போகிறது
முழங்காலைக் கடக்கும் வரையில்
மனம் மகிழ்ச்சியில் தான் துள்ளிக் கொண்டிருந்தது...
அட..!?

இதென்ன பாதங்களையும் கடந்து போகிறதே இந்தப்
பாழாய்ப் போன கைகள்?
பாரம் தாங்காத தோள்கள் கெஞ்சிப்பார்த்தும் பயனில்லை..
பூமியைக் குடைந்து வெள்ளை மாளிகையில் தான் எட்டிப் பார்க்குமோ!?

தோழன் ஒருவனின் கைக் கோடாரி தான்
பெருத்து வளரும் என் கைகளினின்று என்னை விடுதலை செய்தது
வியர்த்து விழித்துப் பார்த்தேன்...
கூரையின் பொத்தல்களூடாய் சந்திரன் கேலியாய்ச் சிரிக்கிறான்..
வெளியே
பெருத்த ஓசையுடன் கடந்து போகிறதொரு
படகுக் கார்..