Sunday, June 24, 2007

அமெரிக்க கோதுமை - மீண்டும் பார்த்தீனியம்?

" நான் உன்னை செருப்பால் தான் அடிப்பேன். பதிலுக்கு நீ என் காலில் விழுந்து கும்பிட வேணும் " - இந்தப் பேச்சு ஒன்றும் நமக்குப் புதிதில்லை..நம் பாட்டன்மார்கள் மூஞ்சியில் அறைந்த - இன்னும் அங்காங்கே எதிரொலித்துக் கொண்டிருக்கும் - அதே வரிகள் தான்.. " நான் கோதுமையை உனக்கு ஏற்றுமதி செய்தால் விஷ விதைகளோடு தான்ஏற்றுமதி செய்வேன். பதிலுக்கு நீ எனக்கு ஏற்றுமதி செய்யும் தானியங்கள் முதல் தரத்துடன் இருக்க வேண்டும்" இது அமெரிக்கா இந்தியாவைப் பார்த்துசொல்லிக் கொண்டிருக்கும் வரிகள். இவ்விரண்டின் சாராம்சமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதல்ல!

சமீபத்தில் இது விஷயமாக நடந்த ஒரு பேச்சுவார்த்தை முறிவுக்குப் பின் ( பரவலான எதிர்ப்புக்குப் பின் தோல்வியடைந்துள்ளது) இந்தியாவின் ஏற்றுமதி தானியங்கள் உலகதரத்துடன் இல்லை என்பதைசுட்டிக் காட்டி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. மறுபுறம்இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா எத்தனிக்கும் தானியங்களிலோ 21 வகையான களைகள் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில்ப்ரோமஸ் ரிஜிடஸ் ( Bromus rigidus ), ப்ரோமஸ் ஸ்கேலினஸ் ( Bromus scealinus) போன்ற ஆபத்து நிறைந்து நச்சு விதைகளும் கலந்துள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன் அமெரிக்கா இந்தியாவுக்குக் கொடுத்த அன்புப் பரிசு தான் பார்த்தீனியச் செடிகள் என்பது பலருக்கு மறந்திருக்காது. தனது கோதுமை தானியத்தில் நச்சு விதைகள் கலந்திருப்பதை மறுக்கவியலாத அமெரிக்கா, அவைகளை களைவது இயலாதவொன்றென்றும் சொல்லிவருகிறது. மேலும் தனது தானியங்கள் ஒப்பீட்டளவில் சிறந்த தரமுள்ளது என்றும், இதையே தாம் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருவதாகவும் சொல்லி இருக்கிறது.

ஜப்பான் இந்த கோதுமையைத் தனது பெரும் இயந்திரங்களுக்கான அரவை துகளாக ( தூசியாக) பயன்படுத்தவே இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலோஇது உணவுக்குப் பயன்படுத்தப் படுவதோடு, நாற்றாங்காலுக்கும் பயன்படுத்தப் படும் ஒன்று.

ஏற்கனவே அமெரிக்கா கொடுத்த அன்புப் பரிசை சமாளிக்க இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை விரயம் செய்தும் பலனில்லாமல் பல்லிளிக்கிறது.தற்போதைய எதிர் குரல்கள் அடங்கிப் போனபின் இந்திய அரசு வழக்கம் போல் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அமெரிக்க கோதுமை இறக்குமதிக்குஅனுமதியளிக்கும் வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு நிகழுமானால் இந்திய அரசு தனது மக்களுக்கு விலை கொடுத்து நோய் நொடிகளை வாங்கிக் கொடுப்பதாகத் தான் அர்த்தம்.

இவைகளைப் படிக்கையில் ஏதோ இந்தியாவில் தானிய விவசாயம் முற்றாக ஒழிந்து விட்டது போலவும் இறக்குமதி கோதுமையை நம்பித்தான் கோடானுகோடிமக்கள் பிழைத்துக் கிடப்பதாகவும் நினைத்தால் - அது தவறு!.. சில வருடங்களுக்கு முன்பு வரை கோதுமை உற்பத்தியில் இந்தியா ஒரு தன்னிரைவுபெற்ற நாடு. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியைக்கைவிட வேண்டிய நிர்பந்தம் உண்டாக்கப்பட்டதின் விளைவே இன்றைய இந்த நிலை.

அம்மாநில விவசாயிகள் இப்போது பரவலாக காண்ட்ராக்ட் பார்மிங் எனப்படும் ஒப்பந்த விவசாய முறையில் பெப்சிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும்உருளையும், பூவும், பழ வகைகளும் விளைவிக்குமாறு நிர்பந்திக்கப் பட்டுள்ளனர். தானியங்கள் கொள்முதலில் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டகுளருபடிகளாலும், வங்கிக் கடன்களை ஈடுகட்ட வேண்டிய நிலையிலும் ஒப்பந்த விவசாயம் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதிலும்பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்கைக்கு பலியான விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருவது தினசரிகளில் செய்தியாய் வந்தவன்னமுள்ளது.

மொத்தத்தில் ஒரு பக்கம் விவசாயிக்குத் திரும்பிய பக்கமெல்லாம் அடி! மறுபுறமோ அத்தியாவசிய தானியங்களையே இறக்குமதி செய்து தான் தேவையை ஈடுகட்டியாக வேண்டிய நிலை! இந்த சூழலை உலகமயமாக்கல் ஒப்பந்தத்தின் மூலமும் இன்னும் பல ஒப்பந்தங்களின் மூலமும் உருவாக்கி விட்டு இப்போது அதைத் திட்டமிட்டு நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நரித்தனம்.

இதைப் பேச எந்தவொரு பெரிய கட்சிக்கும் மனதில்லை. மக்களிடம் இதை எடுத்துச் செல்ல தயாரில்லை. மாட்டுக்கு யார் தாடி ( கவர்னர் ஆட்டு தாடின்னா, ஜனாதிபதி மாட்டு தாடி தானே? ) என்பதை பற்றித் தான் முக்கிய விவாதமாய் நடந்து வருகிறது.

3 comments:

said...

//இதைப் பேச எந்தவொரு பெரிய கட்சிக்கும் மனதில்லை. மக்களிடம் இதை எடுத்துச் செல்ல தயாரில்லை. மாட்டுக்கு யார் தாடி ( கவர்னர் ஆட்டு தாடின்னா, ஜனாதிபதி மாட்டு தாடி தானே? ) என்பதை பற்றித் தான் முக்கிய விவாதமாய் நடந்து வருகிறது.//

நாட்டை கூட்டிக் கொடுக்கும் படு கேவலமான திட்டங்களுக்கெல்லாம் உறுதுணையாக இருக்கும் போலி கம்யுனிஸ்டு பாசிஸ்டு கட்சியான CPM இதோ ஜனாதிபதி தேர்தலிலும் பிற தரகு கோஸ்டி கட்சிகள் போலவே மாட்டுக் தாடி தேடி குட்டையை கிளப்புகிறது. இங்கும் கூட சந்திப்பு என்பவர் தனது பங்கிற்க்கு குட்டை குழப்பி படிபப்வர்களின் சிந்தனையை குழப்புகிறார்.

அசுரன்

said...

செறிவான கட்டுரை!
வாழ்த்துக்கள்!

said...

தோழர் அசுரன் மற்றும் தோழர் அரசு பால்ராஜ், உங்களது கருத்துக்களுக்கு நன்றி, தாமதமான மட்டுறுத்தலுக்கு மன்னிக்கவும்