Friday, August 10, 2007

குண்ட்டா கிண்ட்டே

அலெக்ஸ் ஹேலிக்கு தனது மூதாதையர்களைப் பற்றிய தகவல்களைத் தேட வேண்டும் என்கிற என்னம் தோன்றியது தற்செயலானதோ, ஆச்சர்யமானதொன்றோ கிடையாது. ஆனால் அவர் பல்வேறு சிரமங்களுக்கிடையே சேகரித்த தகவல்களை ஒரு புத்தகமாக வெளியிட்ட போது வாசகன் கண் முன்னே விரியும் காட்சிகள் உணர்த்துவது மிக அசாதாரணமானதொரு வரலாறு. ஆமாம்..... யார் இந்த அலெக்ஸ் ஹேலி? அது என்ன வரலாறு?

அலெக்ஸ் ஹேலி, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பசிபிக் கடலில் பயனம் செய்யும் ஒரு சரக்குக் கப்பலில் அமெரிக்க கடற்கரைப் பாதுகாப்புப் படை சார்பாக சேர்கிறார். அங்கே இருக்கும் நூலகத்தின் மூலம் ஏற்படும் வாசிப்பு அனுபவம் அவருக்கு எழுத்தார்வத்தைத் தூண்டுகிறது. பிற்பாடு அவர் லண்டனில் ஒரு மியூசியத்துக்குச் செல்ல நேர்கிறது. அங்கே அவர் ஒரு பழங்காலத்து எகிப்தியச் சிலையைக் கான்கிறார். அதில் உள்ள எழுத்துக்களை வைத்து அதன் வரலாற்றை ஒரு ப்ரென்ச் அறிஞர் கணிப்பதையும் காண்கிறார். அப்போதே அவர் தனது முன்னோர்கள் மூலம் வழிவழியாக கடத்தப்பட்டு வரும் சில வார்த்தைகளையும், விசித்திரமான ஒலிகளையும் கொண்டு தமது மூதாதையர்களின் பூர்வீகத்தை தேட வேண்டும் என்கிற என்னம் உதிக்கிறது.

அலெக்ஸ் ஹேலி கருப்பினத்தைச் சேர்ந்த ஒரு ஆப்கரோ அமெரிக்கர்!

பல்வேறு சிரமங்களுக்கிடையே தமது பூர்வீக நாடான ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா சென்றடையும் ஹேலி, தனது பூர்வீக கிராமமான ஜப்பூர் கிராமத்தைச் சென்றடைகிறார். அங்கே வழக்கத்தில் உள்ள நாட்டுப்புற பாடல்களின் மூலம் தனது மூதாதையரான குண்ட்டா பிண்ட்டே பற்றிய தகவல்களையும், ஆப்ரிக்க கலாச்சாரத்தையும் உள்வாங்கி தனது முன்னோர்களின் வரலாற்றின் ஊடாக அந்தச் சமயத்தில் அமெரிக்க மூலதனத்தின் கோரப்பசிக்கு இரையான கருப்பர்களின் வாழ்வு பற்றிய தகவல்களை உள்ளடக்கி அவர் எழுதிய நாவல் தான் ஓஏழு தலைமுறைகள்ஔ - ஆங்கிலத்தில் Roots!

நாவலின் பக்கங்கள் நெடுக வெள்ளை இனவெறியர்களின் கடும் சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்குள்ளான கருப்பர்களின் அழுகுரலும், ஆற்றாமையும், கையறுநிலையும், கோபமும் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. குண்ட்டா கிண்ட்டே, ஜப்பூரின் செல்ல மகன். இயற்கையின் ஒரு அங்கமாக வாழும் கள்ளம் கபடமில்லாத அந்த மக்களின் எளிய சட்டங்களும் வாழ் நிலைகளையும் மட்டுமே அறிந்திருந்தவன். அவர்களுக்கு இருந்த ஒரே அச்சம் பிசாசுகளைப் பற்றியது மட்டுமே... அதிலும் வெள்ளைத் தோலும் முகதில் மசிரும் முளைத்த வெள்ளைப் பிசாசுகள் பற்றிய கதைகள் அக்கிராமத்தின் குண்ட்டாவைப் போன்ற சிறார்களை பலவாறு திகிலூட்டிக் கொண்டே இருக்கும். தங்களை அடிமைகளாய்ப் பிடித்துப் போகும் இந்த வெள்ளை நிற பிள்ளைப் பிடிக்கிகள் எங்கோ ஒரு தீவில் தம்மைக் கொன்று தின்பார்கள் என்றெல்லாம் குண்ட்டாவின் பாட்டி சொல்லக் கேட்டிருந்தான். வெள்ளைப் பிசாசுகள் தமக்கு அடியாட்களாக பிசாசு பாஷை பேசத் தெரிந்த கருப்பர்கள் சிலரையும் கூடவே வைத்திருப்பார்கள் என்றும் அறிந்திருந்தான்.

அந்தக் கிராமத்தவர்கள் எவரும் தனியாக எங்கும் போகக் கூடாதென்றும் உயரமான புதர்கள் இருக்கும் பகுதிக்குச் செல்லவே கூடாதென்றும் தமக்குள் கட்டுப்பாடுகள் வைத்திருந்தார்கள். எவருக்கும் நடக்கவே கூடாதென்று குண்ட்டா எதை நினைத்திருந்தானோ அது அவனுக்கே ஒரு நாள் நடந்தது.

ஒரு நாள் காட்டில் விறகு வெட்டப் போன குண்ட்டா கிண்ட்டே வெள்ளைப் பிசாசுகளிடம் மாட்டிக் கொண்டான்!

வெள்ளைப் பிசாசுகளிடம் கடுமையாக போராடிய குண்ட்டாவின் பின்னந்தலையில் கடுமையாகத் தாக்கி மயக்கமுறச் செய்ததும் ஒரு கருப்பர் இனத்தவன் தான். கருங்காலிகள் இல்லாமல் கோடரிகள் முழுமை பெறுவதில்லை - துரோகிகள் இல்லாமல் எதிரிகளின் வெற்றி உறுதிப்படுவதில்லை.

குண்ட்டா கிண்ட்டே மீண்டும் கண்களைத் திறந்த போது நிர்வானமாக ஒரு அசையும் தளத்தில் சங்கிலியால் கட்டப்பட்டுக் கிடப்பதை உணர்ந்தான். அது ஒரு கப்பல் என்று பிற்காலத்தில் தெரிந்து கொண்டான். தன்னோடு தன்னைப் போலவே சில பத்து கருப்பர் இன ஆண்களும் பெண்களும் நிர்வானமாக கட்டிப் போடப்பட்டிருப்பதையும் கண்டான்.

நாலைரை மாத கால நரகம் அதை விடப் பெரியதொரு நரகத்தில் இவர்களை தள்ளிவிட்டதை உறுதிப்படுத்திக் கொண்டு ஜூலை 5, 1767ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அந்தக் கப்பலின் இருண்ட அடிப்பாகத்தில் நாலைரை மாதங்களாக அடைத்து கட்டிப் போடப்பட்டு மலத்துடனும், சிறுநீருடனும் ஜீவித்து...... இடையில் சில முறை தப்பிக்கும் முயற்சியாக ஏற்பட்ட கலகங்களின் காரணமாய் வெள்ளை விளார்களால் முதுகுத் தோல் உரியப்பட்டு... நம்முடைய கற்பனையின் எல்லைகளைக் கடந்ததொரு கொடூரத்தை அவர்கள் அனுபவித்தனர். பசியாலும் பட்டினியாலும் நோயாலும் சித்திரவதைகளாலும் அவர்களில் பாதிப் பேர் வழியிலேயே மாண்டு போயினர்.. குற்றுயிரும் குலை உயிருமாய் மீந்து போனவர்கள் அமெரிக்காவின் அடிமைச் சந்தைகளுக்கு ஓட்டிப் போகப்பட்டனர். அதில் குண்ட்டாவும் இருந்தான்.

தனது நாடு, மக்கள், சுற்றம், உறவுகள்... ஏன், தன்னுடைய உடல், உடலின் சக்தி என்று அனைத்தையும் இழந்த பின்னும் குண்ட்டா பிண்ட்டேவின் சுதந்திர வேட்கையும் தன்மான உணர்ச்சியும் அப்படியே இருந்தது. ஜான் வாலர் என்பவன் அவனை விலைக்கு வாங்கிப் போய் தனது அடிமைக் கூட்டத்துடன் சேர்க்கிறார். அடங்கி ஒடுங்கி அடிமைச் சேவகம் புரிய மறுக்கும் குண்ட்டா, மூன்று முறை தப்பிப் போக முயற்சிக்கிறான்... மூன்றாவது முறை பிடிபடும் போது தப்பியதற்கு தண்டனையாக தனது கால் ஒன்றை இழக்கிறான்.. ஒவ்வொரு முறையும் அவன் தப்பிய போது துரத்திப் பிடிக்க உதவியது கருப்பினத்தவன் ஒருவன் தான்!

தான் எங்கே இருக்கிறோம் என்று தெரியாது. அந்த நாட்டின் பெயர் என்னவென்று தெரியாது எது என்ன திசை என்று தெரியாது. மொழி தெரியாது. அடிமை என்றால், ஆண்டை என்றால், சட்டம் என்றால் இப்படி எதுவுமே தெரியாது குண்ட்டாவுக்கு. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும் - அது தனக்கு சுதந்திரம் இல்லை என்பது! அது மிக மிக அவசியமானதொன்று என்பதுமே.

காலை இழந்த குண்ட்டா ஜான் வாலரின் அண்ணனும் மருத்துவனுமான வில்லியம் வாலரிடம் வந்து சேர்ந்தான்... காலை இழந்து தனக்கு ஒதுக்கப்பட்ட குடிசையில் தனிமையில் இருந்த குண்ட்டா, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கும் தன் தந்தையிடம் பேசுவதாக பாவித்துக் கொண்டு தனக்குத்தானே பேசிக் கொண்டான் -

"ஓஅப்பா! இங்குள்ள கருப்பர்கள் நம்மைப்போல் இல்லை. இவர்களுடைய கை கால்களும், கண், காது, ரத்தமும், சதையும் இவர்களுக்குச் சொந்தமல்ல. இவர்கள் தமக்காக வாழறதில்லே; வெள்ளையருக்காகத்தான் வாழறாங்க. இவங்க மூச்சு விடுவதும் கூட வெள்ளையருக்காகத்தான்! இவங்களுக்கு எதுவுமே சொந்தமில்லே. சொல்லப் போனால் இவங்க குழந்தைகளும் இவங்களுக்குச் சொந்தமில்லே. வெள்ளைக் காரங்களுக்காகத்தான் அவங்களை வளர்த்து ஆளாக்குறாங்க.!"

குண்ட்டாவுக்கு வில்லியம் வாலரின் பண்ணையில் உள்ள பிடிலைய்யா என்னும் செவ்விந்தியரின் நட்பு கிடைக்கிறது. அவருடனான உரையாடல்களின் மூலம் இந்தப் புதிய உலகத்தை புரிந்து கொள்ள முயல்கிறான்.. பிடிலைய்யாவின் குடிசையில் ஒரு நாள் நடந்த உரையாடலின் போது அவர் சொல்கிறார் -

"அங்கே உங்க ஆப்பிரிக்காக்காரங்களும், இங்கே எங்க சிவப்பிந்தியரும் ஒரு விதமான தவறு செய்தாங்க. நீங்க இந்த வெள்ளைக் காரங்களை உங்க நாட்டுக்குள்ளே வரவிட்டீங்க. தின்னவிட்டீங்க. படுக்கவிட்டீங்க. பிறகு அவங்க உங்களைக் குனியவெச்சுக் குத்தும்போது, விலங்கு போட்டு இழுத்துப் போனபோதுதான் உங்களுக்குப் புரிய ஆரம்பித்தது"

புத்தகத்தை ஒரு கணம் மூடி வைத்து விட்டு ஆயாசத்தில் கண்களை ஒரு கணம் மூடினால் - மன்மோகன் சிங்குகளும், வாஜ்பேயிகளும், சிதம்பரங்களும், கருணாநிதிகளும், புத்ததேவ்களும் ராமதாஸ்களும் வந்து எரிச்சலூட்டிச் சென்றனர்

குண்ட்டாவின் துண்டாகிப் போன காலோடேயே அவனுடைய தப்பித்துப் போகும் முயற்சியும் போயாகி விட்டது.. ஆனால் தனது மக்களின் கலாச்சாரத்தை, கதையை, வாழ்க்கை முறையை தன்னுடைய தாய் மொழியான மாண்டிங்காவின் சில வார்த்தைகளைத் தன்னுடைய சந்ததியினருக்கு கடத்திச் சென்றான். அந்த மாண்டிங்கா மொழியின் வார்த்தைகள் தம்முடைய உண்மையான உச்சரிப்புகளை இழந்து விட்ட பின்னும் முன்னூறு வருடங்களுக்குப் பின்னர் குண்ட்டாவின் சந்ததியைச் சேர்ந்த அலெக்ஸ் ஹேலிக்கு அவருடைய பூர்வீகத்தை உணர்த்தும் ஒரு மந்திரச் சொல்லாகவே உறைந்து போய் விட்டிருந்தது.

புத்தகத்தை முடிக்கும் போது பின்னிரவு நேரமாகி விட்டது..

சமீப காலமாய் (அன்புத்)தொல்லைக்குள்ளாக்கி வரும் எனது 'பிரியத்துக்குரிய' ஸ்லீப்பிங் டிஸார்டர் பிரச்சினை மீண்டும் தலை தூக்கி விட்டது.. அறையைப் பூட்டி விட்டு தெருவில் உலாத்தக் கிளம்பினேன்.. அமெரிக்க மூலதனத்துக்கு அடிமைச் சேவகம் புரிய மறுத்த குண்ட்டா கிண்ட்டே அருகிலேயே நடந்து வருவது போன்றதொரு மயக்கம்.

பின்னிரவுச் சாலை கால் செண்டர் கால் டாக்ஸிக்களால் சுறுசுறுப்பாக இருந்தது. நவீன குண்ட்டாக்கள் சவக்களை தெரிக்கும் முகத்துடன் "வில்லியமாகவோ" "வாலஸ்"ஆகவோ அடுத்த ஒரு பன்னிரண்டு மணி நேரத்தைக் கொன்று போடக் கிளம்பிய வன்னமிருந்தனர். இது பதினேழாம் நூற்றாண்டல்ல என்பது லேசாக உறைத்தது - இப்போது அவனுக்கு கப்பல் தேவையில்லை. 'சரக்குகளை' இறக்குமதி செய்ய நாலரை மாதங்கள் கடலோடு போராடத் தேவையில்லை. அன்றைக்கு அவனது பண்ணைகளை கொழிக்க வைக்க கருப்பு உழைப்பு தேவைப்பட்ட போது 'சரக்குகளை' மிகுந்த கப்பலின் இருட்டறையில் அடைத்து வைத்து மிகுந்த சிரமத்தோடு கடத்திக் கொண்டு வர வேண்டியிருந்தது.. இதோ இன்று - ஏ.சி அறையில், நாலடிக்கு நாலடி கேபினில் உட்கார்ந்து கொண்டு ரிமோட் கன்சோலிலோ வெப்பெக்ஸ் கன்சோலிலோ சேவகம் கிடைத்து விடுகிறது.

ஏகாதிபத்திய மூலதனம் அன்றும் சுரண்டிக் கொழுத்தது - இன்றுமப்படித்தான்!

கருங்காலிகளிடம் அன்றைக்கும் அதிகாரமிருந்தது - இன்றைக்குமிருக்கிறது.

நவீன குண்ட்டாக்களுக்கு எல்லாம் கிடைக்கிறது - வார இறுதியில் ஜானி வாக்கர், தினமும் அணிய லெவி, லீகூப்பர்.. உடலில் தெளித்துக் கொள்ள ஜெட்டாக்.... ஆயினும் சாராம்சத்தில் பெரிதாகவொன்றும் வேறுபாடில்லை. அதே அடிமைச் சேவகம்!

அன்றைய குண்ட்டாவுக்கு சுதந்திர வேட்கையும் தன்மானமும் இருந்தது - இன்று?

- குரல்கள்

Tuesday, June 26, 2007

சுரம் தப்பிய முரசொலி

உமது முரசொலியால்
எமது மக்களின் காது கிழிகிறது..

உமது தலைவனின் கரங்கள்
பாஜகாவுக்கு பல்லக்குத் தூக்கிச் சிவந்ததா
மாஞ்சோலை தொழிலாளியின் ரத்தத்தால் சிவந்ததா?
பட்டிமன்றம் வைப்போம் பாப்பையாவைக் கூப்பிடுங்கள்.
பெரியார் கனவில் சொன்னாரோ
மோடியோடு கூடிப்புணர?

பெரியார் உங்கள் முகவரியல்ல
உமது தலைவன் உங்கள் நெற்றியில் போட்ட மூவரி!

நீர் சொன்னது சரிதான்
கொள்கைக்காகவல்ல பதவிக்காகவே கொலைகள் -
கண்ணகி நேசரல்லவா?
அது தான் மதுரை எரிகிறது போலும்

"தவறான கட்சியின் நல்ல மனிதர்!"
சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த வாஜ்பாய்க்கு
பெரியாரைக் காட்டிக் கொடுத்தவரின் சான்றிதழ்!
வெகுபொருத்தமிப் பொருத்தம்

அட,
இன்னுமெதற்கந்த முகமூடி?
அழுகி நாறும் உங்கள் முகத்தைக் கொஞ்சம் காட்டுங்களேன்..

Monday, June 25, 2007

வேண்டும் அசுர குணம்!

அசுர குணம் கண்டு நடுங்கும்
'தேவ' குணத்தோரே
தேவாசுர யுத்தத்தின் போக்கில் கருங்காலிகளின்
வாள் எங்கே திரும்பும் என்று தெரியுமெமக்கு

திருவரங்கத்தில் ஈரோட்டுக் கிழவனின்
மானம் காக்க தெருவிலிறங்காத
உமது குணம்..
எமது மக்களின் வாழ்வை கூவிக் கூவி
அமெரிக்க வெள்ளைப் பார்ப்பனனுக்கு விற்கும்
உமது குணம்..
எமது தேசத்தின் வளங்களனைத்தையும்
அந்நியனுக்கு அடகு வைக்கும்
உமது குணம்...
'தேவ'குணம் தானென்று
நாம் உணர்ந்தேயுள்ளோம்

அங்கே உடைந்தது சிலையின்
தலை மட்டுமல்ல
உமது மஞ்சள் பிம்பமும் சேர்ந்தே தான்...
கல்லக்குடி நினைவுகள்
கனவாய் கரைந்தோடி யுகங்கள் போயின
இன்னுமெதற்கு அந்த மஞ்சள் திரை?
கிழித்து எரியுங்களதை
நீங்கள் அம்மணமாய் நிற்பதை உலகு பார்க்கட்டும்

எமது சூத்திரப் பட்டம் போக்க
மூத்திரப் பையை கையில் சுமந்து
தெருவில் அலைந்த பெரியார் எங்கே.,
தேசத்தை விபச்சாரத்துக்கு அமெரிக்கனுக்கு
தாரை வார்க்கும் நீ எங்கே?

ஆம்! எமக்கு அசுர குணம் தான்!
தேவகுணம் கொண்ட சொறி நாய்களே
வாரும் மோதிப் பார்த்து விடுவோம்

Sunday, June 24, 2007

அமெரிக்க கோதுமை - மீண்டும் பார்த்தீனியம்?

" நான் உன்னை செருப்பால் தான் அடிப்பேன். பதிலுக்கு நீ என் காலில் விழுந்து கும்பிட வேணும் " - இந்தப் பேச்சு ஒன்றும் நமக்குப் புதிதில்லை..நம் பாட்டன்மார்கள் மூஞ்சியில் அறைந்த - இன்னும் அங்காங்கே எதிரொலித்துக் கொண்டிருக்கும் - அதே வரிகள் தான்.. " நான் கோதுமையை உனக்கு ஏற்றுமதி செய்தால் விஷ விதைகளோடு தான்ஏற்றுமதி செய்வேன். பதிலுக்கு நீ எனக்கு ஏற்றுமதி செய்யும் தானியங்கள் முதல் தரத்துடன் இருக்க வேண்டும்" இது அமெரிக்கா இந்தியாவைப் பார்த்துசொல்லிக் கொண்டிருக்கும் வரிகள். இவ்விரண்டின் சாராம்சமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பது தற்செயலானதல்ல!

சமீபத்தில் இது விஷயமாக நடந்த ஒரு பேச்சுவார்த்தை முறிவுக்குப் பின் ( பரவலான எதிர்ப்புக்குப் பின் தோல்வியடைந்துள்ளது) இந்தியாவின் ஏற்றுமதி தானியங்கள் உலகதரத்துடன் இல்லை என்பதைசுட்டிக் காட்டி பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்து விட்டதாக அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. மறுபுறம்இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்கா எத்தனிக்கும் தானியங்களிலோ 21 வகையான களைகள் கலந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. இதில்ப்ரோமஸ் ரிஜிடஸ் ( Bromus rigidus ), ப்ரோமஸ் ஸ்கேலினஸ் ( Bromus scealinus) போன்ற ஆபத்து நிறைந்து நச்சு விதைகளும் கலந்துள்ளது.

சில பத்தாண்டுகளுக்கு முன் அமெரிக்கா இந்தியாவுக்குக் கொடுத்த அன்புப் பரிசு தான் பார்த்தீனியச் செடிகள் என்பது பலருக்கு மறந்திருக்காது. தனது கோதுமை தானியத்தில் நச்சு விதைகள் கலந்திருப்பதை மறுக்கவியலாத அமெரிக்கா, அவைகளை களைவது இயலாதவொன்றென்றும் சொல்லிவருகிறது. மேலும் தனது தானியங்கள் ஒப்பீட்டளவில் சிறந்த தரமுள்ளது என்றும், இதையே தாம் ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துவருவதாகவும் சொல்லி இருக்கிறது.

ஜப்பான் இந்த கோதுமையைத் தனது பெரும் இயந்திரங்களுக்கான அரவை துகளாக ( தூசியாக) பயன்படுத்தவே இறக்குமதி செய்கிறது. இந்தியாவிலோஇது உணவுக்குப் பயன்படுத்தப் படுவதோடு, நாற்றாங்காலுக்கும் பயன்படுத்தப் படும் ஒன்று.

ஏற்கனவே அமெரிக்கா கொடுத்த அன்புப் பரிசை சமாளிக்க இந்திய அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை விரயம் செய்தும் பலனில்லாமல் பல்லிளிக்கிறது.தற்போதைய எதிர் குரல்கள் அடங்கிப் போனபின் இந்திய அரசு வழக்கம் போல் அமெரிக்க நிர்பந்தத்திற்கு அடிபணிந்து அமெரிக்க கோதுமை இறக்குமதிக்குஅனுமதியளிக்கும் வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு நிகழுமானால் இந்திய அரசு தனது மக்களுக்கு விலை கொடுத்து நோய் நொடிகளை வாங்கிக் கொடுப்பதாகத் தான் அர்த்தம்.

இவைகளைப் படிக்கையில் ஏதோ இந்தியாவில் தானிய விவசாயம் முற்றாக ஒழிந்து விட்டது போலவும் இறக்குமதி கோதுமையை நம்பித்தான் கோடானுகோடிமக்கள் பிழைத்துக் கிடப்பதாகவும் நினைத்தால் - அது தவறு!.. சில வருடங்களுக்கு முன்பு வரை கோதுமை உற்பத்தியில் இந்தியா ஒரு தன்னிரைவுபெற்ற நாடு. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக பஞ்சாப், ஹரியானா போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகள் உணவு தானிய உற்பத்தியைக்கைவிட வேண்டிய நிர்பந்தம் உண்டாக்கப்பட்டதின் விளைவே இன்றைய இந்த நிலை.

அம்மாநில விவசாயிகள் இப்போது பரவலாக காண்ட்ராக்ட் பார்மிங் எனப்படும் ஒப்பந்த விவசாய முறையில் பெப்சிக்கும் மற்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கும்உருளையும், பூவும், பழ வகைகளும் விளைவிக்குமாறு நிர்பந்திக்கப் பட்டுள்ளனர். தானியங்கள் கொள்முதலில் வேண்டுமென்றே ஏற்படுத்தப் பட்டகுளருபடிகளாலும், வங்கிக் கடன்களை ஈடுகட்ட வேண்டிய நிலையிலும் ஒப்பந்த விவசாயம் செய்யும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதிலும்பன்னாட்டு நிறுவனங்களின் லாப வேட்கைக்கு பலியான விவசாயிகள் ஆங்காங்கே போராடி வருவது தினசரிகளில் செய்தியாய் வந்தவன்னமுள்ளது.

மொத்தத்தில் ஒரு பக்கம் விவசாயிக்குத் திரும்பிய பக்கமெல்லாம் அடி! மறுபுறமோ அத்தியாவசிய தானியங்களையே இறக்குமதி செய்து தான் தேவையை ஈடுகட்டியாக வேண்டிய நிலை! இந்த சூழலை உலகமயமாக்கல் ஒப்பந்தத்தின் மூலமும் இன்னும் பல ஒப்பந்தங்களின் மூலமும் உருவாக்கி விட்டு இப்போது அதைத் திட்டமிட்டு நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நரித்தனம்.

இதைப் பேச எந்தவொரு பெரிய கட்சிக்கும் மனதில்லை. மக்களிடம் இதை எடுத்துச் செல்ல தயாரில்லை. மாட்டுக்கு யார் தாடி ( கவர்னர் ஆட்டு தாடின்னா, ஜனாதிபதி மாட்டு தாடி தானே? ) என்பதை பற்றித் தான் முக்கிய விவாதமாய் நடந்து வருகிறது.

Friday, June 22, 2007

கனவுகளில் இடறும் மீட்பன்!

நிறையாத வயிறுகளின்
திமிறிக் கிளம்பும் கோபம்..
மடைமாற்றக் கிளம்பி வந்தான்
பரட்டையன்...
வறண்ட வாழ்க்கையின் கனவுகளில் மட்டும் இடறும்
மேக்கப் போட்ட மீட்பன் -
மேக்கப் செல்வு 90 கோடி!

செறிக்காத சிக்கன் பிரியானியின்
அவஸ்தையோடு உள்ளே நெளியும்
கேள்விகளுக்கும்
வெறிக்கும் விழிகளைப் பார்த்து
வியர்க்கும் முகங்களுக்கும்
ஏசி அரங்கினுள் ஆறுதல் தந்தான் சிவாஜியாய்

காலி வயிற்றில் பொங்கும் அமிலத்தை
நீரூற்றித் தனிக்கும் சிவாஜி...
பாராட்டில் தெரியுது மாமியின், மு.கவின்
நிம்மதிப் பெருமூச்சு!

பனையின் நிழல் போல் தான்
இந்தப் பரதேசி தரும் ஆறுதலும்..
உச்சி வேளையில் மீண்டும்..
வெடித்துக் கிளம்பும் கோபம்!
அப்போது அதிரும் அவர்கள் அஸ்திவாரம்!

Thursday, June 7, 2007

சூடு பரவுகிறது!

பெய்யெனப் பெய்கிறது மழை
குரல்வளையை கடக்கும் தேனீரின் இளஞ்சூடு
உயிரின் ஆழம் வரை ஊடுருவிச் செல்கிறது..
என் சாளரத்தினூடாய்த் தெரியும் சாலையில்
சிதைந்ததோர் ஓவியமாய் விரிகிறது
எதிர்கால இந்தியா....

மழைக்காய் கூரைக்கு வெளியே ஒதுங்கிய
பொடியன்களின் காகிதக் கப்பல்கள்...
மூழ்கும் கப்பல்களோடு சேர்ந்து மூழ்கும்
வல்லரசுக் கனவுகள்!
நிலவுக்குப் பறக்கிற ராக்கெட்டை
கூரைப் பொத்தல்கள் வழியே ரசித்துப் பார்க்கும்
நாளைய இந்தியா...

சூடு பரவுகிறது.. இப்போது கண்களில்!

Monday, June 4, 2007

ஓர் இரவில் ஒரு கனவு!

நேற்றுத் தான் அது நடந்தது..
சட்டெனப் பார்த்தால்..
கைகளிரண்டு மட்டும் பெருத்து நீண்டு கொண்டே போகிறது
முழங்காலைக் கடக்கும் வரையில்
மனம் மகிழ்ச்சியில் தான் துள்ளிக் கொண்டிருந்தது...
அட..!?

இதென்ன பாதங்களையும் கடந்து போகிறதே இந்தப்
பாழாய்ப் போன கைகள்?
பாரம் தாங்காத தோள்கள் கெஞ்சிப்பார்த்தும் பயனில்லை..
பூமியைக் குடைந்து வெள்ளை மாளிகையில் தான் எட்டிப் பார்க்குமோ!?

தோழன் ஒருவனின் கைக் கோடாரி தான்
பெருத்து வளரும் என் கைகளினின்று என்னை விடுதலை செய்தது
வியர்த்து விழித்துப் பார்த்தேன்...
கூரையின் பொத்தல்களூடாய் சந்திரன் கேலியாய்ச் சிரிக்கிறான்..
வெளியே
பெருத்த ஓசையுடன் கடந்து போகிறதொரு
படகுக் கார்..